இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இணைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர்.
கொச்சிக்கடை தேவாலய பகுதியில் இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கலந்து கொண்டுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை தேவாலயப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி தற்போது நீதி கோரிய ஓர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் பல உயிர்களை காவு கொண்ட குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது.
நீதி கோரி அமைதிப் பேரணி
இந்த நிலையில் குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு நீதி கோரி நேற்று மாலை 6 மணிக்கு இந்த அமைதிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியானது தற்போது பேலிகொட பகுதியில் வந்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.