”சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
‘‘வெடுக்குநாறி ஆலயப் பகுதி அழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காட்சியளிக்கிறது. சைவ மக்களுடைய மத உரிமை, அந்த இடத்திற்கு சென்று வழிபடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு இதை யார் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு அந்த இடம் அழிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலை
பல மாவட்டங்களிலும் இருந்து பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு அரச அதிபரிடம் தமது கருத்தை சொல்லவுள்ளார்கள். அவர்கள் அந்த ஆலயத்தில் மீண்டும் வழிபட வேண்டும். அந்தக் ஆலயம் கட்டப்பட வேண்டும். அந்த உரிமையை சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் முறையிடுகிறார்கள்.
சில தினங்களுக்கு முன் வெடுக்குநாறி மலை சிவன் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிராக எனது ஆட்சேபனையை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன். அந்த விடயங்களை அனுப்பி வைத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். எமது வேண்டுகோள், சைவ தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தலங்களை அழித்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
சைவ மக்களுக்கும், அவர்கள் வணக்கும் ஆலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொலைபேசியில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன். இந்த இடம் சைவ மக்களுடைய இடம். அதை சுற்றி இராணுவம், தொல் பொருள் திணைக்களம் இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தமிழ் மக்களினுடைய அல்லது சைவ மக்களிடைய மத உரிமையை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அழிக்கப்பட்ட ஆலயம் மீள நிறுவப்பட்டு அது பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரினேன் இதனையே மக்களும் ஆர்ப்பாட்த்தின் மூலம் சொல்லியுள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்று செயற்பட வேண்டும்‘‘ எனத் தெரிவித்தார்.