நாட்டில் சுகாதார அவசர நிலை!

பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே, நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக நேற்று (28.03.23) காலை நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் சுகாதார அவசர நிலை நிலவுவதை சுகாதார செயலாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.

சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் வருகை தராத நிலையில், மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள் இம்முறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர்.

தரமற்ற மருந்து கொள்வனவு
அதனையடுத்து, நாட்டில் எவ்வாறு தரமற்ற மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்ய முடியும் என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் அவசர சுகாதார நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ள சூழ்நிலையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித விக்ரமரத்ன, நாட்டிற்கு வெளியே அவசரகால கொள்வனவுகளை மேற்கொள்ளும் ஏகபோக உரிமையை அவர் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அங்கு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரான நிபுணரான டாக்டர் சமல் சஞ்சீவ, நாட்டில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக யார் பிரகடனம் செய்தார்கள் என வினவ, அதற்கு பதிலளித்த சுகாதார செயலாளர் சந்திரகுப்தா, ஜனாதிபதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரநிலை நிலவுவதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கும், சுகாதார செயலாளர் பிரகடனம் செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை கூறுவதற்கும் முரண்பாடு இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ சுகாதார செயலாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சுகாதார அவசரநிலை
அதனையடுத்து, நாட்டில் அவசர சுகாதார நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், சுகாதார சேவையில் அவ்வாறான அவசர நிலைமை ஏற்பட்டால், சாதாரண முறைக்கு புறம்பாக மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும் என சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார செயலாளரின் பணிப்புரைக்கு அமைய, வழமைக்கு புறம்பாக மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை சார்பில் வருகைதந்த விஜித விக்ரமரத்ன அவர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட வைத்தியர்களின் முறையான வழிகாட்டலின்றி இந்திய கடன் திட்டம் மற்றும் ஏனைய மானியங்களின் கீழ் அத்தியாவசியமற்ற மருந்துகளை பெருமளவு கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தற்போது செயற்பட்டு வருவதாக வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முறையான டெண்டர் நடைமுறையின்றி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை சுகாதார அமைச்சு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

தேசிய மருந்துக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமல் நான்கு வருடங்கள் கடந்துள்ளதை சுட்டிக்காட்டிய வைத்தியர் சமல் சஞ்சீவ, சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விளக்கமளிக்கத் தவறியமையினால், குறித்த விடயம் தொடர்பில் பின்னர் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor