மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (25.03.23) தொடருந்து கடவையினை மறித்து மக்கள் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை தொடருந்து கடவையினை கடக்கும் வீதி பகுதியினை தொடருந்து நிலைய ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதியை தடை செய்தனர். இதனையடுத்து இந்த வீதிதடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபிரதேச மக்கள் ஒன்றினைந்து தொடருந்து கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது தொடருந்து கடவையினை மறித்து பொதுமக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு இரண்டு மணிநேர தாமத்தின் பின்னர் புகையிரம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
பெருமளவான பொதுமக்கள் தொடருந்து கடவையை மறித்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் அப்பகுதிக்கு வந்த கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.
எனினும் அகற்றப்பட்ட வீதியை மீளபுனரமைத்துதரும் வரைக்கும் தாங்கள் இப்பகுதியை விட்டுச்செல்வதில்லையெனவும் குறித்த வீதியை நிரந்தரமாக நிர்மாணித்துதரும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பிரதான வீதியே மக்கள் பாவனைக்கு உகந்தது
குறித்த வீதியுடாக மிகவும் குறைந்த நேரத்தில் மட்டக்களப்பு நகருக்கு செல்லமுடியும் என்பதுடன் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் பயணிக்கவேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு மாணவர்களை கொண்டு செல்லும்போதும் கடமைகளுக்காக செல்லும்போதும் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் சுற்றிச்செல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் இந்த பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவில் எரிபொருளை செலவிடமுடியாத நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை மீண்டும் பயன்பாட்டுக்கு ஏற்றமுறையில் தராவிட்டால் தாங்கள் இப்பகுதியிலிருந்து செல்வதில்லையெனவும் தொடருந்தினையும் செல்லவிடமாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்காலிகமாக புனரமைக்க உறுதி
இதன்போது பொதுமக்களிடமும் தொடருந்து நிலைய அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த வீதியை மீண்டும் பாவனைக்குவிடும் வகையில் மீண்டும் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைப்பு செய்வதாக உறுதியளித்தார்.
எனினும் அதனை புனரமைப்பு செய்தபின்னரே தாங்கள் கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அகற்றப்பட்ட பகுதியை மீண்டும் தொடருந்து நிலைய வேலைப்பகுதி ஊழியர்கள் புனரமைத்ததை தொடர்ந்து மீண்டும் தொடருந்து செல்வதற்கு பொதுமக்கள் அனுமதியளித்தனர்.
எனினும் குறித்த பகுதியை நிரந்தரமாக புனரமைத்துதராவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.