அரச கொடுப்பனவுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

அமைச்சர்கள் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளதும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மாநகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கொடுப்பனவுகைள நிறுத்தவே நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானம் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைக்கப்படும் கொடுப்பனவுகள்

ஆய்வுகள், பயிற்சி,பேச்சுவார்த்தைகள், கருத்தரங்குகள் ஆகிய திறமைகளை விருத்தி செய்யும் வெளிநாட்டு பயணங்களுக்கு, ஒரு தினத்திற்கு 40 டொலர் என்றவகையில் 30 தினங்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 25 அமெரிக்க டொலராக குறைக்கப்பட்டும் உள்ளது.

இதை, 15 நாட்களாக மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உத்தியோகபூர்வ தூதுச் சேவைகளுக்காக அல்லது ஏனைய வெளிநாட்டு உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நாளொன்றுக்கு 75 டொலராக 15 தினங்கள் வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவை, இப்போது, 40 டொரலாகக் குறைக்கப்பட்டு பத்து தினங்களாக மட்டுப்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பயணங்களின் போது தூதுக்குழுவுக்கு தலைமை வகிக்கும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க உரித்தாகும் 750 அமெரிக்கன் டொலர் கொடுப்பனவை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor