காலாவதியான கண்ணீர் புகைக்குண்டு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் போராட்டம்
கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளருக்கு நேற்று (13.03 2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போராட்டத்தின் போது உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் நிமல் அமரசிறியின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் சாட்சியம் அளித்த நிமல் அமரசிறியின் மகன், தனது தந்தை கண்ணீர்ப்புகை காரணமாக ஏற்பட்ட நோயால் இறந்திருக்கலாம் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

காலாவதியான கண்ணீர்ப்புகை

மேலும் போராட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியாகிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உயிரிழந்த நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதனடிப்படையில் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor