பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை முன்கூட்டியே அறிந்தோம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இறுதி போரில் முள்ளிவாய்க்காலில் பெரும் அழிவொன்று ஏற்படப்போகின்றது என்று 10 நாட்களுக்கு முன்பே ஒரு நேர்காணலில் நான் கூறி இருந்தேன்.
இந்த விடயம் அதாவது, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடைபெறும் என்ற விடயம் எனக்கு மாத்திரமன்றி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தெரியும்.
இப்படி ஒரு அழிவு ஏற்பட போவதாக நான் கூறி, யாராவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டேன். ஆனால் இந்த அழிவு தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் பிரபாகரன் யுத்த களத்திலே இருந்தார்.
இருப்பினும் பிரபாகரன் இறக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகின்றேன். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் நிச்சயம் திரும்பி வருவார். இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை.
பிரபாகரன் இறக்கவில்லை
பிரபாகரன் மறைந்துவிட்டார் என்று இந்த உலகமே அதிர்ந்துபோய் இருந்த போது அவர் மறையவில்லை, அவர் உயிரோடு தான் இருக்கிறார், அவர் இறந்ததாக காட்டப்படும் புகைப்படம் உண்மையில்லை என நான் ஒரு நேர்காணல் வழங்கினேன்.
அதற்கு உறுதியான காரணங்கள் என்னிடம் உள்ளன.
போர் முடிவில் இலங்கை அரசாங்கம் பிரபாகரன் இறந்து விட்டதாக அந்த உடலை காட்டுகிறார்கள்.
அவ்வாறு உடலை காட்டும் போது தலையை மட்டும் காட்டாமல் ஒரு தொப்பியை போட்டிருந்தார்கள். இதேவேளை இரண்டு கண்களும் விழித்தபடி இருந்தன.
அதை பார்த்த உடனே நான் சொன்னேன், நான் ஒரு கிராமத்தில் பிறந்தவன் ஒரு நீர்நிலையில் அதாவது, குளம், ஏரி, கடல் என எதுவாக இருந்தாலும் ஒரு மனிதன் அதில் பிணமாகி கிடப்பானெனின் அவனுடைய உடலில் முதல் முதலாக மீன்கள் சேதப்படுத்துவது கண்களை தான்.
அப்படியிருக்கையில் இலங்கை அரசும் ராணுவமும் சொல்லுகின்றது, நந்திக் கடலில் பிரபாகரனின் மரணம் சம்பவித்து, ஒரு இரவு முழுவதும் அவர் அங்கே கிடந்தார், நாங்கள் தான் அவரை கொண்டுவந்தோம் என்கிறார்கள்.
ஆனால் அப்போதும் அவருடைய கண்கள் விழித்தபடி இருந்தது. இது எனது முதல் சந்தேகம்.
இரண்டாவது சந்தேகம்
இரண்டாவது, விடுதலைப் புலிகளின் சீருடையை அணிந்து அதில் எப்போதும் அவருடைய பெயரை பொறுத்திக்கொள்ளும் வழக்கம் பிரபாகரனுக்கு இல்லை.
ஆனால் பிரபாகரன் என்று சொல்லி காட்டப்பட்ட சடலத்தில் அந்த பெயர் வில்லை இருந்தது.இதுவும் முரணாக இருந்தது.
எனவே இதை ஏற்பாடு செய்தவர்கள் ஏதோ ஓர் உள்நோக்கத்திற்காக தான் செய்திருக்கிறார்கள். பிரபாகரன் உறுதியாக மரணமடையவில்லை என்று அப்போது சொன்னேன்.
ஆனால் அதற்கு ஒரு கால மாதத்திற்கு பின்னர் பிரபாகரனின் அருகிலேயே இருந்த ஒருவரை நான் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.
சம்பந்தப்பட்ட நபரை நான் சந்தித்த போது அவர் தப்பிவிட்டார் என கூறினார். அப்படி கூறியவர் இன்றும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் அவுஸ்திரேலியாவில் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை என்னை அழைப்பார்.எனவே நான் உறுதியாக கூறுகின்றேன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் நிச்சயம் திரும்பி வருவார்.”என கூறியுள்ளார்.