உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய துருக்கியின் நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளது.

திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 28,192 ஐ எட்டியுள்ளது.

துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கிய துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிரியாவில் இறப்புகளின் எண்ணிக்கை 3,575 ஆக பதிவாகியுள்ளது.

புதிய இணைப்பு
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,848 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

இதேவேளை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வான்வழி படங்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்து விடப்பட்டுள்ள சிரிய அகதிகள்
மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் 6 ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரினால் வீடுகளை இழந்தவர்களின் நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளதாகவும்,மீட்புப் பணியில் மட்டுமின்றி உணவு, மருத்துவத்திலும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor