சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட அவகாசத்துக்கு பதிலாக, சீனாவின் எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
இலங்கையின் கடனை 15 வருட காலத்துக்கு மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளதாகவும் நிலையில் சீன எக்ஸிம் வங்கியின் அவகாசம் இலங்கையின் பொருளாதார வலிகள் மேலும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க, இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதாக இந்தியா ஏற்கெனவே எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.
10 வருட கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு கால அவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வுக்கு இந்தியா ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.