க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் அறிவித்துள்ளார்.
நேற்றும் மின்தடை
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமலிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது.
ஆனால் நேற்றும் நாட்டில் பரவலாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, உறுதிப்பாட்டை மீறி மின்தடை மேற்கொள்ளப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார சபையை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
4.1 பில்லியன் ரூபா தேவை
மேலும் கூறுகையில், க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது.
அவ்வாறு மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாது இருக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான கிரயத்தை சமாளிப்பதற்கான நிதி வழங்கப்பட வேண்டும். இந்த நிதி வழங்கப்படாமல், மின்சார தடையை இடைநிறுத்த முடியாது.
இந்த காலப்பகுதியில் மின்தடையை நிறுத்துவதாக இருந்தால், அதற்கு 4.1 பில்லியன் ரூபா மேலதிக தேவையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.