கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தகநிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும்
குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்
குறித்த குழுவினரை கைது செய்வதற்காக விசேட அணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தினர்
குறித்த சம்பவம் நேற்றுமுன் இரவு 10.10மணியளவில் கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர்.
மேற்படி குழுவினர் வர்த்தக நிலையம் மீது வெற்று பியர் போத்தல் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் உரிமையாளரினை வாளினால் வெட்டிவிட்டு வர்த்தக நிலையத்தினையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தினையும் குறித்த குழுவினர் திருடி சென்றுள்ளனர்.
வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ,தடயவியல் பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.