யாழில் பேருந்து பயணியை அநாகரீகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி!

யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை – யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர், பருவகாலசீட்டு பெற்று பயணம் செய்து வந்துள்ளார்.

ஆவரங்காலிற்கு அண்மித்த பகுதியில் அவர் பேருந்தில் ஏறுவது வழக்கம். தன்னை, குறிப்பிட்ட ஒரு பேருந்து சாரதி ஏற்றிச் செல்வதில்லையென யுவதி இ.போசவிற்கும் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், யுவதியை பேருந்து ஏற்றிச் செல்வதில்லை. இந்த நிலையில் யுவதியின் உறவினர்களும் பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து, பேருந்தை மறித்து, யுவதியை ஏற்றிவிட்டனர்.

இதன்போது, உறவினர்கள் பேருந்து சாரதியுடன் முரண்பட்டிருந்தனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது, யுவதியை அநாகரிகமான முறையில் சாரதி திட்டியுள்ளார்.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யுவதி முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து, சாரதியை பொலிசார் அழைத்து எச்சரிக்கை செய்தனர். தனது செயலுக்காக யுவதியிடமும் சாரதி மன்னிப்பு கோரினார்.

Recommended For You

About the Author: webeditor