ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்-அனுர

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர் இழப்பீடுகளை செலுத்துவது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடர சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினருக்கு இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

எனினும் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக புதிய வழக்கை தொடர வேண்டியது அவசியம். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் முக்கியமானது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இரண்டு பிரதான தரப்புகள் உள்ளன. தாக்குதலை தடுக்க தவறிய ஒரு தரப்பும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தரப்பும் உள்ளன.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய தாக்குதலை தடுக்க உயர்மட்ட அரசியல் தரப்பும், அதிகாரிகளும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பது மிகவும் தெளிவாகியுள்ளது.

இதனடிப்படையில், தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக புதிய வழக்கை தொடர்வதற்கு தேவையான சான்றுகள் கிடைத்துள்ளன. சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்கை தொடர வேண்டும் என்பதுடன் மண்ணில் புதைந்து மறைந்து போக இடமளிக்காது தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor