முட்டையை சிறிய ரக பாரவூர்திகள் மூலம் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்தவோ அல்லது நுகர்வோருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு பாரிய தீங்கை இழைத்துவிட்டு, அவர்களிடம் சென்று தற்போது நாடகங்களை அரங்கேற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது இந்த நடவடிக்கையை நிறுத்தி விட்டு, அதனை சீராக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வர்த்தக அமைச்சினால், முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முட்டை உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த நிலையில், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தமக்கு தலையிட முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் மேலும் விலை அதிகரித்து பொதுமக்களுக்கு முட்டையை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டி இருக்கும்.
அடுத்த வாரங்களில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கினால், நுகர்வோர் விவகார அமைச்சர் என்ற வகையில் தொடர்ந்தும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய பகுதியில் சிறிய ரக பாரவூர்திகள் மூலம் 55 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்ய இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், குறித்த விலைக்கு முட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.