ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது உடனடியாக நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால் கால்நடை அறிவியல், பொறியியல், பொருளாதாரம் மற்றும் வேளாண்மை மற்றும் ஊடகவியல் போன்ற பாடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன
இந்தநிலையிலேயே தற்போது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. முன்னதாக மாணவிகளுக்கு, பேராசிரியைகள் அல்லது வயதான ஆண்கள் மட்டுமே கற்பிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் கல்வித் துறை தலிபான் கையகப்படுத்தப்பட்ட பின்னர் மோசமாகப் பாதிக்கப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் திரும்பப் பெற்ற பிறகு பயிற்சி பெற்ற கல்வியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம், தலைநகர் காபூலில் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, அங்குள்ள பூங்காக்களுக்கு பெண்கள் செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.