பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள செய்தி!

பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் மூவர், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவ சிகிச்சை
200 க்கும் மேற்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், பெரும்பாலும் இலங்கை அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறும் தமிழர்கள், 2021 அக்டோபர் மாதம் முதல் ஐந்து தொடர்ச்சியான படகுகளில் டியாகோ கார்சியாவை சென்றடைந்துள்ளனர்.

எனினும் பின்னர், அந்த தீவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்களில் பலர் இலங்கைக்குத் திரும்பினர். மற்றவர்கள்,இந்தியப் பெருங்கடலின் குறுக்கே அமைந்துள்ள பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவுக்குச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் பிரித்தானிய வெளியுறவு,பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், எஞ்சியுள்ள 100க்கும் அதிகமான இலங்கை தமிழர்களில் மூவர், ருவண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக அழைத்துச்செல்லப்படும் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த ‘புலம்பெயர்ந்தோர்’ சிகிச்சை முடிந்த பிறகு டியாகோ கார்சியாவுக்கு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தஞ்சம்

பிரித்தானியாவின் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த ஏப்ரல் மாதம் ருவாண்டா அரசாங்கத்துடன் செய்துகொண்ட கடல்கடந்த செயலாக்க ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்த, பிரித்தானிய அதிகாரிகள் முற்படலாம் என்ற அச்சத்தை இந்த மருத்துவ இடமாற்றம் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை டியாகோ கார்சியா தீவைச் சேர்ந்த அதிகாரிகள், இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கைக்கு பாதுகாப்பாக திரும்ப முடியாது என தீர்மானித்துள்ள அவர்கள், குறிப்பிடப்படாத ‘மூன்றாவது நாடுகளுக்கு’ அனுப்பப்படுவார்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor