படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்த ஒருவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
மூவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது கைது செய்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள்
பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆராச்சிக்கட்டுவ பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரும் பங்கதெனிய சின்னக்கருவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் ஆவார்.
2018 ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸுக்கு பிரவேசிக்க ரீயூனியன் தீவுக்குச் சென்ற எழுபத்தி இரண்டு பேர் ரீயூனியன் தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 2019 பெப்ரவரி 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இதுவரை அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர்
ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் நொச்சியாகம உடுநுவர கொலனியை வசிப்பிடமாகக் கொண்டவர்.
37 வயதான இந்த நபர் கடந்த 2011ஆம் ஆண்டு இரகசியமாக ஜப்பானுக்கு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.