ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
உயர் வருமானம் பெறுபவர் தொடக்கம் குறைந்த வருமானம் பெறுபவர் வரைக்கும் மறைமுக வரிச் சுமையினைச் சுமக்கின்றார்கள். நமது வரி கட்டமைப்பில் உள்ள தவறுகளில் ஒன்று 80 சதவீதம் மறைமுக வரிகளாக இருப்பதாகும். நேரடி வரிகள் 20 வீதமே உள்ளது. எனவே நேரடி வரிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நடுத்தர வர்க்கத்தில், ஒரு இலட்சத்திக்கு மேல் சம்பளம் ஒருவருக்கு தற்போது வரிக் கொள்கையின் மூலம் அண்ணளவாக இருபதாயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டி வரும். அவ்வாறு வரி செலுத்தும் போதும் அவர் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கும் வரியினைச் செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. அவ்வாறு செய்வதால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர்,
உலக நாடுகளை நோக்கும்போது ஈரான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளைத் தவிர குறைந்த வரி வருமானம் இருப்பது இலங்கையிலாகும்.
நேரடி வரிகளை 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட இரு நாடுகளுக்கும் வரி வருமானம் தேவைப்படுவதில்லை, காரணம் அங்கு எண்ணெய் வள வருமானம் இருக்கின்றது ஆனால் எம்மிடம் அவை எதுவுமே இல்லை. எனவே, குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக நாம் இந்த வரிகளை விரும்பியோ விரும்பாமலோ வசூலிக்க வேண்டும்.
தற்போதுள்ள வரி கட்டமைப்பில் அதிகரிக்கக்கூடியதாக இருப்பது மறைமுக வரிகளைத்தான். எனினும் இங்கு குறைந்த வருமானம் பெறுபவர்களால் அதனை விளங்கக் கூடியதாக இருக்கும். எனவேதான், மறைமுக வரிகளை 60 சதவீதமாகக் குறைத்து நேரடி வரிகளை 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைக்கிறது.
அந்த வகையில் பயணிக்கும் போது அதன் முதற்கட்டம்தான் உழைக்கும் போது வருமானத்தில் வரி அறவிடுவதாகும். கடந்த காலங்களில் உழைக்கும் மக்கள் எட்டு மில்லியனுக்கும் அதிகமாக இருந்தனர்.
பொறுப்பைச் செய்யாத இலங்கையர்கள்
எனினும் வரி செலுத்துவது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் மாத்திரமேயாகும். வரி செலுத்தும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது நியாயமற்ற கட்டமைப்புப்போலக் காணப்படலாம்.
வரி செலுத்தும் இரண்டரை இலட்சம் பேருடைய கோவைகளே இருக்கின்றதென்றால் வருமானம் ஈட்டுபவர்கள் தமது பொறுப்பைச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.
முன்னேறிச் செல்லும் போது இப்போதிருக்கும் வரிக் கொள்கை 9 வீதத்திலிருந்து 14 வீதம் வரை அதிகரித்துச்செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் அடுத்த வருடம் நிலையானதாக மாறினால் வரி அதிகரிக்கும்.
பொருளாதாரம் நிலையாகும் போது நிறுவனங்கள் இலாபம் ஈட்டலாம். அப்போது வருமான வரியின் அளவினை உயர்த்த முடியும். அப்போது ஒரு இலட்சம் ரூபா என்பதனை ஒன்றரை இலட்சமாக உயர்த்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.