ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்குள்ள பெண்கள் ஈரான் அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மற்றொரு மரணம் நிகழ்ந்து உள்ளது. 16 வயதான மாணவியொருவர் அடித்தே கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வடமேற்கு அர்டபில் நகரில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மாணவிகள் சிலர் ஈரானின் உட்சபட்ச அதிகாரிகளைக் கொண்ட சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியை புகழ்ந்து பாட மறுத்துள்ளனர்.
பள்ளி மாணவிகள் மீது கொடூர தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மாணவிகளைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதன்போது பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 16 வயதான அஸ்ரா பனாஹி பாதுகாப்பு படையினர் தாக்கியதில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், மாணவி உயிரிழந்ததற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது. அஸ்ரா பனாஹியின் உறவினரும் மாணவி இதய பிரச்சினை காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த செப். மாதம் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் பொலிஸார் அவரை கைது செய்து தாக்கியமையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெண்கள் தலைமுடியை வெட்டியும் ஹிஜாபை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.