இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் புக்கர் (Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.
மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள், ( “The Seven Moons of Maali Almeida ) என்ற நூலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. 1980ளின் சிவில் யுத்தத்தில் தனது சிறு வயது காலத்தை கடந்த ஷெஹான், யுத்த அனுபவங்களை மையப்படுத்தி நாவலை எழுதியுள்ளார்.
இறுதி சுற்றுக்கு ஆறு நாவல்கள் தெரிவு
போர் தொடர்பான புகைப்படக் கலைஞரின் அனுபவ விபரிப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. மரணத்தின் பின்னரான வாழ்க்கை, பேய்கள், பிசாசுகள் பற்றிய கற்பனா விபரிப்புக்களும் இந்த நாவலில் காணப்படுகின்றது.
இந்த நாவல் மிகச் சிறந்த முறையில் வாசகர்களை திருப்திபடுத்தக் கூடிய சகல அம்சங்களையும் கொண்டமைந்துள்ளது என புக்கர் விருது வழங்கும் நடுவர் குழாமின் உறுப்பினரும் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் முன்னாள் பணிப்பாளருமான நீல் மெக்ரேகர் தெரிவித்துள்ளார்.
இம்முறை புக்கர் விருதுகளுக்காக இறுதி சுற்றுக்கு ஆறு நாவல்கள் தெரிவு செய்யப்பட்டது. சிம்பாப்வே எழுத்தாளர் நோவியலோட் புலாவயோ உள்ளிட்ட சிலரின் படைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
1975ம் ஆண்டு காலியில் பிறந்த ஷெஹான், தலைநகர் கொழும்பில் வளர்ந்து நியூசிலாந்தில் கல்வியை தொடர்ந்தார். பின்னர் பணிக்காக பிரித்தானியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்துள்ளதுடன் தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றார்.
சினமன் என்ற நாவலுக்கு விருது
விளம்பர பிரதி எழுத்தாளர், இசைக்கலைஞர் என என பல்வேறு கோணங்களில் தனது திறமைகளை ஷெஹான் வெளிப்படுத்தி வருகின்றார். ஷெஹானின் முதல் நாவலான சினமன் என்ற நகைச்சுவை நாவலுக்கு 2012ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் விருது கிடைக்கப் பெற்றது.
போர் நிறைவடைந்த பின்னர் அதனை பிரதிபலிக்கும் வகையில் ஓர் நாவலை எழுத உத்தேசித்த போதிலும் அப்போதைய காலச்சூழ்நிலையில் அது பொருத்தமானதாக இருக்கவில்லை எனவும், பின்னர் 2014ம் ஆண்டில் தாம் இந்த நூலை எழுதியதாகவும் ஷெஹான் தெரிவித்துள்ளார்.
இன வெறுப்பு, ஊழல் மோசடிகள், அரசியல் இயலாமை, போரின் நீண்ட நெடிய வேதனைகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை வழங்க்க்கூடிய வகையில் இந்த மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள் நாவல் அமைந்துள்ளது.