மிகிந்தலையில் காட்டு யானை எரிப்பு- விசாரணை தீவிரம்!

மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் நபர் ஒருவரால் காட்டு யானை ஒன்று எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பான தகவல்கள் இன்று (17) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானையை எரித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரைத் கைது செய்வதற்காக, அநுராதபுர வலய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 50-55 வயதுடைய, 9 அடி உயரமான இந்த ஆண் யானை, ஏற்கனவே இடது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளாகியிருந்தது.

இதற்காகப் பன்டுலகம கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளால் கடந்த மே 14, ஜீன் 04 மற்றும் ஜீலை 03 ஆகிய திகதிகளில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்ததாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் குறித்த யானை தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், அநுராதபுர வலய அதிகாரிகள் தொடர்ந்து யானையைக் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று (16), தீக்காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சீப்புகுளம், அம்பகஹவெல பகுதியில் உள்ள காணியொன்றில் யானை வீழ்ந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அநுராதபுர வலய அதிகாரிகளால் பன்டுலகம கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.

பின்னர், கால்நடை வைத்தியர் உதேஷிகா மதுவந்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து யானைக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அது பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Recommended For You

About the Author: admin