தற்காலிக் குடியேற்றவாசிகளின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், திறனை கடந்து அளவுக்கு அதிகாமான குடியேற்றவாசிகளை உள்வாங்கியுள்ளதாகவும், எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Dartmouth இல் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ட்ரூடோ, தற்காலிக குடியேற்றம், குறிப்பாக சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கூர்மையான உயர்வை எடுத்துக்காட்டினார்.
“தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது சர்வதேச மாணவர்களாக இருந்தாலும் சரி கனடாவால் உள்வாங்க முடிந்ததை விட அதிகமாகனவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்” என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு மனநலப் பிரச்சினை
2017 ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் இரண்டு வீதமாக மட்டுமே தற்காலிக குடியேறியவர்கள் தற்போது 7.5 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்காலிக குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை சர்வதேச மாணவர்களுக்கு மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், வணிகங்கள் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கச் செய்வதாகவும், இது குறிப்பிட்ட தொழில்களில் ஊதியத்தைக் குறைக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
“நாங்கள் அந்த எண்களைக் குறைக்க விரும்புகிறோம். இது குடியேற்றத்திற்கான ஒரு பொறுப்பான அணுகுமுறையாகும், எங்கள் சமூகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திய தற்காலிக குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
வீட்டுப் பற்றாக்குறை கவலைகள்
2022 இல், கனடா 5.5 லட்சம் சர்வதேச மாணவர்களை உள்வாங்கியுள்ளது. இதில் 40 வீதமானவர்கள் இந்திய மாணவர்கள் ஆவர். மேலும் கனடாவில் மாணவர் விசாவில் 3.2 லட்சம் இந்தியர்கள் தங்கியுள்ளனர்.
ஆனால் குடியேற்றத்தின் வேகம் கனடாவில் வீடுகளை நிர்மாணிப்பதை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 35 லட்சம் குடியிருப்புகள் குறைவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கைக்கு இலக்கை நிர்ணயிக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் மார்ச் 21 ஆம் திகதி அறிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கனடாவின் மக்கள் தொகையில் ஐந்து வீதமாக குறைப்பதே இலக்கு என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நிரந்தர குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரை, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 485,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்க கனடா இலக்கு கொண்டுள்ளது.
கனடா சர்வதேச மாணவர் அனுமதிகளில் உடனடியாக இரண்டு வருட வரம்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.