அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுக்கூறும் வகையில், நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற 200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி என்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மலையக தொழிலாளர் சமூகத்தை தேயிலை தொழில்முயற்சியாளர்களாக உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தை சொந்த நிலத்தை வைத்துள்ள தேயிலை தொழில் முயற்சியாளராக மாற்றும் புரட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து நாட்டுக்கு அந்நிய செலாவணியை தேடிதந்து பலம் சேர்க்கும் மலையக மக்களுக்கு தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.