2024 ஆம் ஆண்டு அதிகளவானோர் வேலை இழக்கும் அபாயம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் டொலரின் பெறுமதி 185 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி அறிவித்த போதிலும் டொலரின் பெறுமதி 327 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் உயர் VAT வரி
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் அரசாங்கத்தின் உயர் VAT வரி காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதனால், தமது உற்பத்திப் பொருட்களை போட்டி விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகும் வர்த்தகர்கள், தமது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நிலை உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களை கைவிட வேண்டிய நிலையேற்படும் போது , ​​நாட்டில் அடுத்த வருடத்தில் பெருமளவிலானோர் வேலை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பு
இந்த நாட்டின் உண்மையான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 5500 பில்லியன் ரூபா எனவும், அவ்வாறான சூழ்நிலையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு, பணத்தை அச்சிடுதல், உள்நாட்டில் கடன் வாங்குதல் அல்லது வெளிநாட்டில் கடன் வாங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயரும் எனவும், இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு வரிச் சுமை, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதியுறும் மக்கள் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor