உலகின் பணக்கார நகரங்கள்

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உலகில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.​

இந்த ஆண்டு உலகின் மிக செலவுகூடிய நகரம் எனும் பட்டத்தை சிங்கப்பூரும் சூரிச்சும் (Zurich) பகிர்ந்துகொள்கின்றன.

அதனைத் தொடர்ந்து ஜெனீவா, நியூயார்க் மற்றும் ஹாங்காங் நகரங்கள் உள்ளன.

சராசரியாக, பொதுவாக பயன்படுத்தப்படும் 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உள்ளூர் நாணய மதிப்பு கணக்கிடப்பட்டு கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 7.4% விலைகள் உயர்ந்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டு 8.1% ஆக இருந்து வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் Economist Intelligence Unit வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் “2017-2021 இல் இருந்த போக்கை விட கணிசமாக அதிகமாகவே விலைகள் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கடந்த 11 ஆண்டுகளில், பல வகைகளில் அதிக விலை உயர்வு காரணமாக தரவரிசையில் ஒன்பதாவது முறையாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசாங்கம் விதித்துள்ளதால், அங்கு போக்குவரத்து செலவுகள் மிக அதிகமாக உள்ளது.

மேலும், அங்கு ஆடை வகைகளும் மளிகைப்பொருட்களும் மதுபான விலைகளும் வேறெங்கும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளன.

சுவிஸ் நாணயத்தின் வலுவான மதிப்பு மற்றும் மளிகைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், பொழுதுபோக்கிற்கான செலவுகள் என்பனவற்றின் அதிகரிப்பு காரணமாக சூரிச்சும் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜெனிவாவும் நியூயோர்க்கும் அதிகூடிய செலவுகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், ஹாங்காங் ஐந்தாவது இடத்திலும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆறாவது இடத்திலும் உள்ளன.

ஏனைய நகரங்களுடன் ஒப்பிடுகையில், ஆசிய நகரங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலை உயர்வைக் கொண்டுள்ளதாக Economist Intelligence Unit சுட்டிக்காட்டியுள்ளது. நான்ஜிங் (Nanjing), வுக்ஸி (Wuxi), டேலியன் ( Dalian) மற்றும் பெய்ஜிங் உட்பட பல சீன நகரங்கள் இந்த ஆண்டு தரவரிசையில் பின்தள்ளப்பட்டுள்ளன.

ஜப்பானின் ஒசாகா மற்றும் டோக்கியோவும் கணிசமாக பின் சென்றுள்ளன.

Recommended For You

About the Author: webeditor