தீபாவளி கொண்டாட்டத்திற்காக மதுபான நிலையம் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாகவும் திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவர் நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(12.11.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் வசிக்கும் பழனியாண்டி மோகன்ராஜ் என்ற 42 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினகள் பொலிஸில் முறைப்பாடு
மேலும் அதே தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பாலமாணிக்கம் வேலுகுமார் என்பவரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரும் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு கீழே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபதான பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு நேற்று மாலை சென்றுள்ளனர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுபானம் வாங்க சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை என குடும்ப உறவினகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கை
வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய திம்புலபத்தனை பொலிஸார் டெவோன் கால்வாயில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த வேளையில், டெவோன் நீர்வீழ்ச்சிக்கு கீழே கொத்மலை ஆற்றில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றும் காணாமற்போன இருவரும் டெவோன் கால்வாயின் குறுக்கே உள்ள சிறிய ஆற்றை கடக்க முற்பட்ட வேளையில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor