ஹட்டன் – பொகவந்தலாவ பகுதி பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை ஒருவர் தடியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச் கைது நடவடிக்கை நேற்று (08-11-2023) காலை 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தரம் 4 வகுப்பறையில் கடந்த 06-11-2023 ஆம் திகதி ஆங்கில பாடம் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேலை அருகில் உள்ள மாணவன் தாக்கப்பட்ட மாணவனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 9 வயது சிறுவனுக்கு வலது கை மற்றும் உடம்பின் பின் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் சிறுவனின் உடம்பின் பின் புறத்தில் காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனிடம் 2 மணித்தியாலத்திற்கு மேலான வாக்கு மூலமும் தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்ட 5 மாணவர்களிடம் வாக்குமூலம் பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் தாக்குதல் சம்பவத்திற்கு பொகவந்தலாவ பகுதி பாடசாலையில் அதிபர் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என சிறுவனின் தந்தை பொலீஸ்மா அதிபர், பிரதி பொலீஸ்மா அதிபர், உதவி பொலீஸ்மா அதிபர் ஹட்டன் போலிஸ் அதிகாரி ஆகியோரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.