கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்ள வேண்டும், அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
எந்தவித முரண்பாடும் கிடையாது
மேலும் தெரிவிக்கையில்,“பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது.
எனினும், பதவிகள் மாற்றமடைவதால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.
ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு மட்டுமன்றி சஜித் பிரேமதாஸ, சரத்பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்கவையும் அன்று நாம் அழைத்தோம். இவர்கள் யாரும் வரவில்லை.
கூட்டணி அரசியல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கான கௌரவத்தை நாம் அவருக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், ஜனாதிபதி கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும், கட்சிகளுக்கு இடையில் அமைதியை பேணவும் ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தை போன்று இரண்டு தலைவர்களும் வெவ்வேறாக செயற்படமால், பேசித் தீர்மானங்களை மேற்கொள்வது நாட்டின் வீழ்ச்சியை தடுக்கும்.
அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், இந்த விடயத்தை தமது சக கூட்டணி பங்காளிகளுடன் தெரிவிக்கவும் கலந்துரையாடவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.