பொது மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள், தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பெருமளவான பணத்தை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக்குழுவில் பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

முதலில் பொதுமக்களின் தொலைபேசி இலக்கங்களை சேகரிக்கும் இவர்கள் அதன் பின்னர் குறுஞ்செய்தி மூலம் அவர்களை அனுகின்றனர்.

வரிக் கட்டணம்
மாதாந்த குலுக்களில் உங்களது தொலைபேசி இலக்கம் தெரிவாகியிருக்கின்றது என்றும், 2 மில்லியன் பணப்பரிசினைப் பெற்றுக்கொள்ள ஒரு தொகை வரிக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

இதன் பின்னர், தொலைபேசி ஊடாக அழைப்பேற்படுத்தி கவர்ச்சிகரமான வார்த்தைகள் மூலமும், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சில வர்த்தக வங்கிகளது பெயர்களைப் பயன்படுத்துவதுடன், நம்பும்படியான சில தொலைபேசி வலையமைப்புக்களின் போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பிலும் கதைக்கின்றனர்.

எனினும், நீங்கள் வெற்றிப் பெற்ற பணத்தைப் பெற்றுக்கொள்ள கால தாமதம் ஆனதால், ஒரு தொகை வரித் தொகை செலுத்துமாறும், அதன் பின்னரே பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்த ஏமாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், அவர்கள் தொலைபேசி இணைப்பில் இருக்கும் பொழுது வேறு ஒருவருடனும் கதைக்கவோ, தொலைபேசியில் அழைக்கவோ அனுமதிப்பதும் இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வாறு அனுமதிப்பதில்லை என அந்த மோசடிக் கும்பல் குறிப்பிடுகின்றனர்.

இவற்றை நம்பும் ஒரு சிலர் வரிப்பணம் செலுத்துவதற்காக வங்கியை நாடிய சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.

அதேவேளை, இவர்களது மோசடியை கண்டுபிடித்து அழைப்பினை நாங்கள் துண்டிக்க முற்பட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகின்றது. அவர்கள் அழைக்கும் தொலைபேசி இலக்கத்திற்கு மீண்டும் அழைப்பு எடுக்க முற்பட்டால் அந்த இலக்கம் தவறானது என கூறப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக இவ்வாறு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புக்களை உறுதிப்படுத்திய பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor