நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

செரியாபாணி பயணிகள் கப்பல்
செரியாபாணி எனும் பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் நாகப்பட்டினத்தில் இருந்து இன்று காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

14 ஊழியர்கள் ,150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை செரியாபாணி கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள செரியாபாணி கப்பல், மாலை 5 மணிக்கு துறைமுகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor