இப்போதைய தலைவர் ஊடாக பெரிய பதவியை அடைய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் அஸ்ரபை கலங்கப்படுத்த வேண்டியது யாருக்கும் தேவையில்லை. தேவையானவர்கள் பதவிகளை எப்படியாவது யாரை காக்காய் பிடித்தாவது பெற்று கொள்ளலாம். முஸ்லிங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத, தாய் மண்ணுக்கு ஆதரவாக செயற்பட முடியாத, சுமந்திரன் போன்றவர்கள் கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாத நிஷாம் காரியப்பர் போன்றவர்கள் தலைவர் அஸ்ரபை கொச்சைப் படுத்துவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக உயர்பீ ட உறுப்பினரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.ஏ. சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டதரணியுமான நிஷாம் காரியப்பர் தனியார் ஊடகமென்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் பல விடயங்களை தெரிவித்திருந்தார். அதில் முக்கியமாக கல்முனை விடயத்தில் மோசமான கருத்துக்களை கூறியதுடன் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான எச். எம். எம். ஹரீஸ் மரணிக்கும் வரை இந்த பிரச்சினை தீர்க்கப்படமாட்டது என்றும் இந்த பிரச்சினையை ஹரீஸ் எம். பி தான் உருவாக்கினார் என்பது போலும், அந்த பிரச்சினையை தீர்க்க ஹரீஸ் எம்.பிதான் தடையாக இருப்பது போலும் விதண்டாவாத கருத்துக்களை கூறி மக்களையும், எதார்த்தங்களையும் குழப்பி அடித்துள்ளார். அவரது இந்த செவ்வியில் வெளியான பல கருத்துக்கள் மன வேதனை தரும் கருத்துக்களாக அமைந்துள்ளது.
முஸ்லிங்கள் பெரும்பான்மையாக வாழும் சகோதரர் நிஷாம் காரியப்பாரின் தாய் மண்ணான கல்முனையை தூண்டாட 1989 களில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத குழுக்களும், அதன் பின்னர் வந்த மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் கல்முனையை தூண்டாட செய்த சதி வேலைகளை பற்றி சகோதரர் நிஷாம் காரியப்பார் எப்போதும் வாய்திறப்பதில்லை.
குறிப்பாக முஸ்லிங்களின் நகர், வஜார், காணி, வர்த்தக நிலையங்கள், பெறுமதியான சொத்துக்களை கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கி முஸ்லிங்களுக்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்களும், சில அதிகாரிகளும் செய்த அநியாயங்களுக்கும், துரோகத்துக்கும் நியாயம் கேட்டு அவர்களுக்கு எதிராக இதுவரையில் சகோதரர் நிஷாம் காரியப்பார் ஒரு வார்த்தையேனும் இதுவரை வாய் திறக்காமல் இருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அரசியல் ரீதியாக பல தடவைகள் தமிழ் தலைமைகள் இந்த நகரத்தை கையகப்படுத்த எடுத்த முயற்சிகளின் போது அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சகோதரர் நிஷாம் காரியப்பார் போன்றவர்கள் முன்வராத காலகட்டத்தில் கூட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனியாக நின்று போராடி தமிழ் தலைவர்களின் அரசியல் ரீதியான சதியை முறியடித்தார்.
தமிழ் தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் அவர்களின் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் அவரை எதிர்த்து எதிர்கொள்ள சகோதரர் நிஷாம் காரியப்பாரை ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக்கொண்ட போது தனது தாய் மண் ஆபத்தின் விழிம்பில் இருந்த போதும் கூட சுமந்திரனை எதிர்த்து நீதிமன்றம் செல்லாது ஊர் பிரமுகர்களின் கோரிக்கையை மறுத்தது மட்டுமல்லாமல் கல்முனை முஸ்லிங்களின் சொத்துக்களை கையகப்படுத்த முயலும் சுமந்திரனின் செயற்பாடுகளை ஒரு சந்தர்ப்பத்திலேனும் கண்டிக்காத இவர் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கத்தக்கதாக 2018 இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளரான இவர், சுமந்திரன் ஆகியோர் உட்பட பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது முஸ்லிங்களுக்கு நியாயம் வழங்க முன்வராதவர்கள் யார் என்பது சகோதரர் நிஷாம் காரியப்பருக்கு நன்றாக தெரியும்.
ஒருமாதமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமந்திரன் அடங்களாக தமிழ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு முஸ்லிங்களுக்கு நியாயம் வழங்க மறுத்த விடயத்தை சகோதரர் நிஷாம் காரியப்பர் தெரிந்து கொண்டும் பல வழக்குகளில் சகோதரர் நிஷாம் காரியப்பருடன் சுமந்திரன் ஒன்றித்து நிற்பதால் அவர்களை நியாயவாதிகளாக காட்டமுனைகிறார்.
பல வழக்குகளில் நிஷாம் காரியப்பரும், சுமந்திரனும் ஒருமித்து வாதாடுவதால் இவர்களுக்கிடையில் ஒரு உடன்பாடு இருப்பது போன்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. கல்முனை விடயத்தை சுமந்திரனுக்கு விட்டுக்கொடுக்க இணக்கம் காணப்பட்டதோ என்ற சந்தேகம் இப்போது பேசுபொருளாக உள்ளது. இவைகளுக்கிடையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஷாம் காரியப்பர் கூறியுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதேபோன்று 20ம் திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பில் கட்சி முடிவை மீறி எம்.பிக்கள் வாக்காளித்ததாகவும், துரோகிகள் என்றும் கூறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஷாம் காரியப்பர் 03 வருடங்களின் பின்னர் கட்சியினதும், தலைவரினதும் அனுமதியுடந்தான் எம். பிக்கள் வாக்களித்ததாக ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு அபாண்டங்களை கூறிவரும் நிஷாம் காரியப்பர், இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமை விட பெருந்தலைவர் அஸ்ரப் சாணக்கியம் குறைந்த, கெட்டித்தனம் குறைந்தவர் என்ற கருத்தை முன்வைத்து மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரபை தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தி பேசி எங்களை மிகவும் வேதனைக்குட்படுத்தியுள்ளார். பெருந்தலைவரின் ஆளுமை, சாதனை, திறமைகளை நாட்டின் முக்கிய பல அரசியல் தலைவர்கள் சிலாகித்து பேசிக்கொண்டிருக்கும் போது, தலைவர் அஸ்ரபை கொச்சைப்படித்தி பேசிய முதல் அரசியல்வாதி நிஷாம் காரியப்பர் தான். என்று தெரிவித்துள்ளார்.