கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கியதாகும்.
குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
திடீர் தீ விபத்து காரணமாக அந்த பிரிட்டிஷ் கொலம்பியா முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 36,000 பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2,400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார்கள் மற்றும் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு வசிக்கும் 20,000 பேரில் 19,000 பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். எஞ்சியுள்ளவர்களில் உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியேற சொல்லி சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4,000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
தற்போது இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 15,000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த எண்ணிக்கை 20,000 வீடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் மட்டுமே இதுவரை 1000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கணிக்க முடியாத வகையில் மாறி வரும் பருவநிலை, அதிக வெப்பம், இதைத் தொடர்ந்து காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் காரணமாக அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் வான்வழி தீயணைப்பு படை தவிர பிற விமானங்களுக்கு, கெலோனா சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள வான்பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.