இலங்கை வரும் சர்வதேச நாணயநிதிய குழு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக அக் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முதலாவது மதிப்பாய்வின் போது ஜூன் மாதம் இறுதி வரையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் செயல்திறன் பரிசீலிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து குறித்த அதிகாரிகள் குழுவினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டால், சுமார் 338 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கடந்த மார்ச் மாதம் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகாரமளித்தது.

இதன் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு முன்னதாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor