கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 11 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நம்பிக்கை மீறல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை நாளை (19ம் திகதி) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நான்கு நிதி மோசடி வழக்குகள் தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர் சிறையில் இருப்பதாக மினுவாங்கொடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு சந்தேக நபரை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு 12, மெசஞ்சர் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, தற்போது சிறையில் உள்ள சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் முறைப்பாட்டாளர், எலும்பு முறிவு சிகிச்சை நிலையத்தில் சந்தேக நபரை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் வைத்தியசாலையில் வேலை
தனக்கும் தனது மனைவிக்கும் கனடாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வேலை பெற்றுத் தருவதாகவும் முறைப்பாட்டாளரின் இரண்டு பிள்ளைகளுக்கும் கனடாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களின் நகல்களுடன் முறைப்பாட்டாளர் முதலில் ஒரு லட்சம் ரூபாவை வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் 11 இலட்சம் ரூபா வரையில் அவ்வப்போது வரவு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பண மோசடி
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவம் கூறப்படுகின்றது. சந்தேக நபர் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்ததையடுத்து, சந்தேகநபர் காலிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor