வடக்கு என்பது தமிழர்களின் மாகாணமா! என்று கேட்கும் நிலை விரைவில் உருவாகும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன்
———————————————————————–
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.
29ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
தமிழ் மக்களுடைய மொழி கலாச்சாரம் பண்பாடு ஆகிய பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதனைப் பாதுகாப்பதற்கு 13 வது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட பல அதிகாரங்களை மீளப்பெற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது இருப்பை ஓரளவு நிலை நாட்ட முடியும்.
நான் அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியின் பிரதிநிதியாகவோ எனது செயற்பாடுகளை என்றைக்கும் மேற்கொண்டதில்லை. ஆனாலும் எனக்கு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை தந்துள்ளார்கள்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது.
இராமநாதன் தொடக்கம், 50:50 திட்டத்தினை முன்வைத்த காலம் வரையான தலைவர்களின் மகத்தான தவறாகும்.
அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கொழும்பை மையமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை நோக்கினார்கள்.
கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களின் பிரதேசமாக உள்ளது அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகத்திலும் பார்க்க கூடுதலாக காணப்படுகின்றனர்.
திருகோணமலையில் பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டார்கள்.
ஏனனில் தமிழர்களை கவனிப்பார்கள் இல்லை. அவர்களை கவனிப்பதற்கு அதிகாரமும் இல்லை.
எமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடையமுடிவதோடு தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
எனவே உரிய முறையில் மாகாணசபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்த எல்லா கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். கல்வியலாளர்கள், பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.
மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வல்ல. காலா காலம் இலங்கை ஜனாதிபதிகள் ஒவ்வொரு தீர்வு முறைமைகளை முன்வைத்தனர்.
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதித் தீர்வை முன்நிபந்தனையாக வைத்தால் சிங்கள ஆட்சியாளர்கள் ஒற்றையாட்சியையே வலியுறுத்துவார்கள்.
05,வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் என்று கூறும் நிலை மாறிவிடும். அதற்கு பின் எந்த அதிகாரத்தை கேட்க முடியும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எப்படி கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களுடையதாக மாறியதோ அது போல் வடக்குமாகாணமும் மாற்றமடையும்.
தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமது சமூதாயத்தின் அபிலாசைகளையும், அவர்களது இருப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இதுவே அரசியல் தலைவர்களின் கடமை எனத் தெரிவித்தார்.