திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது.
யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது.
அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம்முடைய வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றில் அட்சதை பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தல்
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மலர் தூவி ஆசிர்வாதம் செய்வதை விட, அட்சதை தூவி வாழ்த்துவது மிகவும் உயர்வானதாகும்.
அட்சதை இல்லாத பட்சத்தில் மலர்களை பயன்படுத்தலாம். சமஸ்கிருதத்தில் அக்ஷதம் என்ற சொல்லுக்கு இடிக்கப்படாத அல்லது பாதிக்கப்படாத என்று பொருள்.
அட்சதை தயாரிப்பதற்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள்.
அரிசியோடு, மஞ்சள், பசு நெய் சேர்த்து உருவாக்கப்படுவதற்கே அட்சதை என்று பெயர்.
வெள்ளை அரிசியில், மஞ்சளும், நெய்யும் சேர்க்கும் போது அதில் தேவதைகளின் அம்சம் நிறைந்து காணப்படும்.
மணமக்கள் மீது தூவுவதன் அர்த்தம்
இதை திருமணத்தின் போது மணமக்கள் மீது தூவுவதால், தேவதைகளே வந்து அவர்களை ஆசீர்வதிப்பதாக அர்த்தம்.
அரிசி, மஞ்சள், நெய் மூன்றும் தெய்வங்களுக்கு இணையாக கருதப்படும் மங்கள பொருட்கள் ஆகும்.
இவை மூன்றையும் ஒன்றாக சேர்க்கும் போது தானாக அதற்கு தெய்வீக தன்மை என்பது வந்து விடும்.
அரிசி சந்திரனுக்குரிய தானியமாகும். மஞ்சள் குருவிற்குரிய நிறமாகும். நெய் மகாலட்சுமியின் அம்சமாகும்.
இவை மூன்றும் சேரும் இடத்தில் சுபிட்சம் இருக்கும். அது மட்டுமின்றி அரிசிக்கு உணர்வுகளையும், சக்திகளையும் ஈர்க்கும் சக்தி உண்டு.
ஆன்மிக ரீதியாக அரிசியை உடலுடனும், மஞ்சளை ஆன்மாவுடனும், நெய்யை தெய்வத்துடனும் ஒப்பிடுவார்கள்.
மணமக்களை வாழ்த்துதல்
உடல், ஆன்மா ஆகியவை தெய்வ சக்தியோடு இணைந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்பதை குறிக்கவே அட்சதையை பயன்படுத்தி ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
திருமாங்கல்யம் அணிவிக்கும் போது அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது.
பொதுவாகவே அரிசியை கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் உள்ளது. அட்சதையையும் கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது.
அதனாலேயே ஒரு தட்டில் வைத்து, அட்சதையை கொடுக்கிறார்கள். இதனால் அதன் தெய்வீக தன்மை குறையாமல் இருக்கும்.
அட்சதை என்பது செல்வ வளம், வரம், வம்ச விருத்திக்கு வழிவகுக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.