கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதாவது,மகன் இரவு முழுவதும் தனது அறைக்குள் இருந்து தூங்காமல் கணினி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த மாணவனின் இளைய சகோதரர் தனது சாட்சியத்தில் அண்ணன் தினமும் கணினி விளையாட்டில் ஈடுபடும்போது அந்தப்பக்கம் போ இந்தப்பக்கம் போவென அறைக்குள் தனியாக இருந்து சத்தமாக பேசி சண்டையிட்டுக் கொள்வதாகவும் குடும்பத் தாருடன் பேசுவதனை விரும்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். நான் நீண்டதூரம் போகிறேன்.
நான் எந்த ஒரு பெண் பிள்ளையினாலும் இந்த முடிவை எடுக்கவில்லை. தம்பி தங்கயை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என எழுதி வைத்துள்ளார்.
கம்பளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சுசந்த ஹேரத்தினால் மேற்கொள்ளப் பட்ட மரண பரிசோதனையின்போது கழுத்து இறுகி ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஏற்பட்ட மரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண விசாரனைகளின் போது வெளிபட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்ததில் கணினி தொடர் விளையாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.