கறுப்புஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அத்துடன் கனேடிய தூதுவர் படுகொலைகளை தெரிவு செய்து கண்டிக்கின்றார் என தெரிவித்துள்ளார். இலங்கையில் 1983 இல் சிங்கள காடையர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சிங்களவர்களுக்கு குரல்கொடுக்கவில்லை
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் வன்முறைகளையும் நாகரீகமுள்ள எந்த மனிதனும் கண்டிப்பான். இடம்பெற்ற வன்முறைகளை நாங்களும் முழுமனதுடன் கண்டிக்கின்றோம்.
அதேவேளை அக்காலப்பகுதியில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து தமிழர்களை காப்பாற்றிய சிங்களவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம்.
இதற்கு பதிலடியாக 1983ம் ஆண்டு ஜூலையின் பின்னர் தமிழ் காடையர் கும்பல்களால் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்கள், தமிழர்களை நாங்கள் நினைவுகூறுகின்றோம்.
கிழக்குமாகாணத்தில் சிங்கள கர்ப்பிணித்தாய்மார்கள் கொல்லப்பட்டதையோ அநுராதபுரத்தில் 200 யாத்திரீர்கள் கொல்லப்பட்டதையோ அரந்தலாவையில் இளம் பிக்குகள் கொல்லப்பட்டதையோ ஆயுதமேந்தாத சரணடைந்த 600 பொலிஸார் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதையோ கனடா தூதுவர் கண்டித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை என்றும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
மேலும் படுகொலைகளை தெரிவு செய்து கண்டிப்பது அந்த நபரின் நாகரீக இயல்புகளை கேள்விக்குட்படுத்துவதுடன் அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துகின்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.