எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள், விலை சூத்திரத்திற்கமைய வலுசக்தி அமைச்சினால் திருத்தியமைக்கப்படும்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தூதுரக மட்டத்தில் சாதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரமொன்று பேணப்பட்டு வருகிறது.
குறித்த விலை சூத்திரத்திற்கமைய உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கமைய இலங்கையிலும் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை ரஷ்ய அரசாங்கத்திடம் குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தூதரக மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய அரசாங்கம் எரிபொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுவதில்லை.
அரசாங்கத்தினால் எரிபொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதில்லை. எனவே இது தொடர்பில் ரஷ்யாவின் தனியார் துறையினருடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்தினால் இதற்கான நடவடிக்கைகள் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.- என்றார்.