மன்னம்பிட்டி சம்பவம் – முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இன்று காலை முதல் பொலனறுவை வைத்தியசாலையில் ஜனாசாக்களை துரிதமாக விடுவிக்கும் முயற்சியில் ….
நேற்று இரவு கதுருவெலயில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து மன்னம்பிட்டி கொட்டலி பாலம் எனும் பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 1 1பேர் வரை உயிரிழந்ததுடன் 45இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று காலையிலேயே பொலனறுவை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் உடல்களை விரைவாக விடுவித்து இறுதிக்கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் ,
குறிப்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரதி பணிப்பாளர்கள் விடுமுறையில் இருப்பதனால் தற்போது வைத்தியசாலைக்கு பொறுப்பாக உள்ள நிருவாக உத்தியோகத்தரை சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டதுடன் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பொலிஸ் தரப்பு , சட்ட வைத்திய அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரி என்போரை சந்தித்து உடல்களை விரைவாக விடுவிப்பது தொடர்பிலும் , குறிப்பாக முஸ்லிம் சகோதர சகோதரிகளது உடலங்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் விரைந்து அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தியதுடன் இன்றைய தினமே உரிய முறைகளை துரிதமாக பின்பற்றி அவற்றை விடுவிக்குமாறும் வேண்டிக் கொண்டவராக களத்திலே செயற்பட்டு வருகின்றார் ,
மாலை வேளையை கடந்தும் அனைத்து உடலங்களையும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இன்றைய தினமே உறவினர்களிடம் உடலங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை தரப்பு மேற்கொள்வதுடன் இன்று காலை முதல் உறவுகளை இழந்தவர்களோடு ஒரு உறவாக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா களத்திலே நின்று செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
பெரும்பாலும் அனைத்து ஜனாசாக்களையும் இன்று இரவு வேளைக்குள் விடுவிக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா நம்பிக்கை வெளியிட்டார்
இதன்போது கோரளைப்பற்று மேற்கு- ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அஸீஸூர் ரஹீம் ஆசிரியரும் கலந்து கொண்டுள்ளார்.