கனடாவில் விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஜவர் கைது!

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, தேடுதல் உத்தரவுக்கு அமைய நேற்று கடவத்தை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டது.

அங்கு, 03 கணனிகள், 03 மடிக்கணினிகள், 04 பிரிண்டர்கள், 01 ஸ்கேனர்கள், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், பல்வேறு கடவுச்சீட்டுகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் ரொக்கமாக 1,187,130 ரூபாய் பணத்துடன் சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசா கோரி வருபவர்களின் பெயரில் போலியான லெட்டர்ஹெட்களை பயன்படுத்தி பல்வேறு சொத்து விவரங்கள், பண வைப்பு சான்றிதழ்கள், கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor