பலகோடி ரூபா பெறுமதியிலான மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவை மன்னம்பிட்டி அருகே கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையின் இரண்டு களஞ்சியங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு களஞ்சியங்களிலும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் 6 வருடங்களாக நிறுத்தப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

உடனடி விசாரணை
ஒட்டுமொத்த நாடும் மருந்து தட்டுப்பாட்டால் தவித்து வரும் இவ்வேளையில், 2017ம் ஆண்டு இந்த மருந்துகளை வெளியிடாதது குறித்து உடனடி விசாரணை நடத்தி அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே குறித்த மருந்துப் பொருட்கள் அனைத்தும் 2017ம் ஆண்டே காலாவதியாகி விட்டதாகவும், அவற்றை சுகாதார அமைச்சுக்கு கையளிப்பதற்காகவே அங்கு சேமித்து வைத்திருந்ததாகவும் பொலன்னறுவை சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் பொலன்னறுவையின் போக்குவரத்து வசதிகளற்ற கிராமிய மருத்துவமனையின் களஞ்சியசாலைகளுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை குறித்து பிரதேசவாசிகள் பெரும் சந்தேகத்தை வௌியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor