கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி!

பொருளாதார நெருக்கடிகள் உட்பட மற்றும் பல காரணங்களை முன்வைத்து பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை வழங்கி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை (19) மஹரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு காரணங்களை முன்வைத்து பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்டு செல்லும் சிறுவர்கள் குறித்த முறையான அறிக்கையொன்றை தயாரித்து இலவச பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்வியை இடை நடுவில் கைவிட்டு செல்வதால் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முடியாமலும், சமூகத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் அது வழிவகுக்கும். இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அறிக்கை பெற வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் இவ்வாறு விலகிச் செல்வதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும்.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள் மற்றும் இலவச பயிற்சி நெறிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அது வழிவகுக்கும் என்றார்.

Recommended For You

About the Author: webeditor