மகிந்த ராஜபக்ச சந்தர்ப்பங்களை தவறவிட்டு நீலிக் கண்ணீர் வடிக்கிறார் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

முன்னாள் ஐனாதிபதியும் பெரமுன கட்சியின் தலைவர்களில் ஒருவருமான மகிந்த ராஐபக்ச கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் ஐனாபதியாக இருந்த போது கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டிருக்க முடியும் அதற்கு சிங்கள தமிழ் தரப்பில் யாருடைய எதிர்ப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை அவ்வாறான ஒரு வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.

தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள் நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஐபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஐபக்ச ஐனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு
எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு .

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றி கொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் புரையோடிப் போய்யுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது.

Recommended For You

About the Author: webeditor