ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் வியாழக்கிழமை (ஜூன் 08) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கைதுசெய்யப்பட்ட பெண் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஜப்பானின் ஒசாகாவில் வேலை தருவதாக உறுதியளித்து இரண்டு நபர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடியாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 08) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், இன்று (ஜூன் 09) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

இவ்வாறான மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக பணம் கோரும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறுவதற்கு, www.slbfe.lk ஊடாக SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது அவர்களின் ஹாட்லைன் 1989 ஐ அழைக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor