நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர்.
அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் (8) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான, கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், நாட்டில் கடமயாற்றும் பதில் அதிபர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
நாட்டில் மொத்தமாக 2984 பேர் பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர். அவர்களில் மேல் மாகாணத்தில் 203பேர், மத்திய மாகாணத்தில் 528 பேர், சப்ரகமுவ மாகாணத்தில் 459பேர், வடமத்திய மாகாணத்தில் 332பேர் வடமேல் மாகாணத்தில் 373பேர், ஊவா மாகாணத்தில் 367பேர், தென் மாகாணத்தில் 316பேர், கிழக்கு மாகாணத்தில் 254பேர் மற்றும் வடக்கு மாகாணத்தில் 152பேர் இருக்கின்றனர். என்றாலும் இவர்களில் சுமார் ஆயிரம் பேர் வரை தற்போது ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர்.
அத்துடன் பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் இருப்பவர்களே பதில் அதிபர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளின்போதும் சம்பள உயர்வுகளின்போதும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும் அதிபர் சேவையின் பிரகாரம் அவர்களுக்கு அந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இடம்பெறுவதில்லை.
மேலும் பதில் அதிபர்களாக கடமையாற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறும்போது பதில் அதிபர்களாக இடமாற்றம் செய்யப்படுவதில்லை.
இந்நிலையில் மாறாக அவர்கள் ஆசிரியர் சேவையின் பிரகாரம் இடமாற்றம் கோரினால் அதற்கு ஏற்றவகையில் இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்படும்.
மேலும் பதில் அதிபர்களாக கடமையாற்றுபவர்களை நிரந்தர சேவையில் உள்வாங்க பல தடவைகள் முயற்சித்தபோதும் அதற்கு தொழிற்சங்கங்கள், தடைகளை ஏற்படுத்தி நீதிமன்றம் சென்றதால் அந்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
என்றாலும் அந்த அதிபர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ள கொள்கையளவில் விரைவில் தீர்மானம் மேற்கொள்வோம். அத்துடன் நாட்டில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பதில் அதிபர்கள் பாடசாலைகளில் கடமையாற்ற காரணமாக இருப்பது.
அதிபர் வெற்றிடங்களை நிரப்ப உரிய காலத்துக்கு போட்டிப்பரீட்சைகளை நடத்தி நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.