வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு பிராந்திய காரியாலயத்தின் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (30.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5,000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொடுக்க 25,000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
பொலிஸார் சோதனை
இந்நிலையில், இரவு 11 மணியளவில் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக இரவில் ஒன்று கூடி நின்றோர் என சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.