ஆசிரிய பயிலுனர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஆசிரிய நியமனத்திற்காக, தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என, அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய கல்வியற் கல்லூரியில் 7 ஆயிரத்து 800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

மேலும் அந்த பரீட்சையை காலந்தாழ்த்தாது எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor