போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப்பிரஜை மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கை நகர்புற அபிவிருத்தித்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் தலையீட்டினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமையன்று (18.05.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறித்த சீனப்பிரஜையின் கடவுச்சீட்டு போலியானவை என்று கண்டறிந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த மூவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அவர்கள், ஒழுக்கமற்றமுறையில் நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் தலையீட்டினால், மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் போலியான கடவுச்சீட்டுடன் பயணித்த சீனப் பயணியை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரிய இராஜாங்க அமைச்சர் அவர் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
தமது அமைச்சின் கீழ் வரும் சில வீட்டுத் திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்வதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதலீட்டாளருடன் வந்திருந்த மற்றுமொரு சீன பிரஜையும் எகிப்தியர் ஒருவரும் நேற்று (21.05.2023) காலை விடுவிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்துள்ள குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போலி கடவுச்சீட்டில் கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது ஆச்சரியப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.