பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் வைத்து போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸ் நிலையம் மற்றும் நுகேகொட பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 20 கிராம் 900 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 80 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
16 பேர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹோகந்தர, கொட்டாஞ்சேனை, பேஸ்லைன் வீதி, கிருலப்பனை, குளியாபிட்டிய, மலமே, பத்தரமுல்ல, திஸ்ஸமஹாராமய, மஸ்கெலியா, மொரட்டுவ, பெலவத்தை, வத்தளை மற்றும் கடுவெல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 09 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தரகர்கள் குடிவரவுத் திணைக்களத்திற்கு அருகில் தங்கியிருந்து கடவுச்சீட்டைச் செயலாக்குவதற்காக 25,000 ரூபாவைச் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.